ஆடிப் பெருக்கு!  (காவிரியின் அழகு!)

 

ஆடிப் பெருக்கு!

ஆடிவந்த காவிரியாள் அழகுடன்,

        புகுமெங்கள் காவிரிப் பூம்பட்டினம்!

 

ஆடிப் பெருக்கெங்கே!

ஆடியிலே காற்றடிக்க ஆலம் கூட ஆடிவிடும்!

தேடியே விதைத்துவிட மேழியுமே கோலமிடும்!

நாடிய வாழ்க்கையதில் நல்லதையே தேடிவிட,

கூடியெழும் கூட்டந்தான் கொள்ளும் விழாவே!

ஆடியின் பதினெட்டில் அன்னையவர் காவிரிக்கு!

பாடியும் ஆடியும் அனைவரும்மாய்க் கூடியும்,

ஓடிவரும் நீர்க்கிளையில் ஒய்யார விழா எடுப்பர்!

பாடிய பொருளாவாள் பைந்தமிழ் போல் காவிரியே!

சின்னஞ் சிறாரும் சீர் கொண்ட நங்கையரும்,

சின்னத் தேரொன்றைச் சிங்காரம் செய்துவைத்து,

பொன்னியெனும் காவிரிக்கும் மலர்தூவி ஆதரித்து,

தென்னாட்டு வழக்கினிலே மண்ணிலே பிள்ளையாரை,

கண்ணாரப் பிடித்து வைத்து பூசனைத்தான் செய்வர்!

மண்ணாண்ட வழக்கிதுவே வடுவின்றிப் போயினதே!

எண்ணாத நிலைக் கெம்மை ஏன் செய்தாள் காவிரியாள்!

திண்ணமோ, வான்பொய்யினும் தான்பொய்யா ளென்பதுவே!

கவிவளவன் 17-07-2020 (20.55 hrs)

தேடி நின்ற மக்களுக்கு,

        திரளாகச் சீர் நெல்லமுதம்!

நாடி வந்த யாவருக்கும்,

        அன்னமிடுமெங்கள் தமிழ்ப்பரப்பு!

மூடியெழும் மேகத்தை நாங்கள்,

        தேடி யோர்நாளும் வாழ்ந்ததில்லை!

 

ஆடிவந்த நாயகியாம் காவிரி,

        அணைத்து நின்றக் காலமது!

வாடாது நீர் கொழிக்க, எங்கள்,

        கரிகாலன் தேடினான் கல்லணையே!

தேடாமோ நாமவள் கரையில்,

        திரண்ட பெரும் கோயில்கள்!

நாடுவார்க்கு அங்கே தனித்தனியாய்,

        சைவ, வைணவ, திருத்தலங்கள்!

 

ஈடின்றி வாழ்ந்த தேசம்,

        இன்றெங்கே தன்னில் நிறைகிறது?

கோடிட்ட வழிமுறையில் நாங்கள்,

        கொண்டாடும் நாளிது வன்றோ!

ஆடிவரும் காவிரியை அணைக்கும்,

        ஆடிப் பெருக்குத் திருவிழா!

கூடிநிற்கும் கோரைப் புற்கள்,

        கொண்டவளாய் ஆனாளே காவிரியாள்!

-      *கவிவளவன்* 03-08-2022 (07.40 AM)