வீடுதோறும், அறிவொளியே தேடி வருகுது.. ! எனும் இக்கவிதைத் தொகுதியின் படைப்பாளர்,  கவிஞர் திரு க.சு. அகஸ்தியன். தாம்பரத்தை அடுத்த இராஜ கீழ் பாக்கத்தை வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் இவர், வேளாண் பொறியியல் துறையில், உதவிப் பொறியாளராகப் பணி நிறைவு கண்டுள்ளார். இலக்கியத்தின் பால் இவர் கொண்ட ஈடுபாடே, கவிதை புனையும் ஆற்றலை இவருள் வளர்த்துள்ளது. இதுதான் முதல் தொகுதி என்கிறார். அனைத்தையும் ஆசிரியப்பாவில் அடக்க இயலும். மரபு என்றோ, சாராதது எனும் கூற இயலாத வகையில் பாக்கள் அமைந்துள்ளன. அனைத்தையும் தொட்டுவிட்ட நிலை காணப் படுகிறது.

                    அவ்வபோது,  நிகந்ழ்த நிகழ்வுகளும் மனம் தேடிய வினாக்களுமே, கருப்பொருளாய் அமைந்துள்ளன. தன்னை ஈன்ற பெற்றோருக்கு நூலை படையல் செய்துள்ளார். தமிழா உன் அடையாளம் தொலைந்து போனதோ எனும் கவிதையில், தமிழைப் புறந்தள்ளலையும், வடமொழி கலப்பையும், ஆங்கிலம் தேடுதலையும், நகைச்சுவையோடு பகிர்கிறார். அமுதூட்டி, பாராட்டி சீராட்டி வளர்க்கும் தாயை, தாயின் சிறப்பும் பெண்ணின் பெருமையும் எனும் கவிதையில் வெளிப்படுத்துகிறார். காலாலே உதைக்கின்றாய் கடும் விசையில் பறக்கின்றேன் எனும் கவிதையில், உந்துவிசை இருச்சக்கர வாகனத்தைப் பற்றி, அதன் செயல் பாடு, வேகம், பயன்பாடு ஆகியவற்றை அழகு தமிழில் பதிகிறார்.  இஃது, எளிய தமிழில் ஆன ஒரு கவிதை நூல், யாவரும் படிக்க இயலும், காலச் சூழலை நகைச்சுவையாய் வடித்திருக்கிறார். கவிதை விரும்பிகளும் சில இடங்களில் சுவைத்து மகிழ்வர்.