திருத்தம் செய்யப்பட்டது
மனக்குறள்
அகரவரிசை
ய
யவனர்,தமிழகம் வந்துபோன
செய்தி
இலக்கியத்தில் நாம்படித்த துண்டு.
யா
யார்யாரோ சந்திப்பார்
நண்பராக மாறுவார்!
கால விளையாட்டைப் பார்.
யி
பயிர்பச்சை நீரின்றி
காய்ந்துபோனால் பாரில்
உயிரினங்கள் தத்தளிக்கும் ! சாற்று
யீ
குறியீட்டெண்
எல்லோர்க்கும் இன்றிங்கே வாழ்வில்
நெறிமுறை யானது பார்.
யு
யுத்தம் அணுயுத்தம்
ஆகிவிட்டால் புல்பூண்டு
மக்களும் மிஞ்சமாட்டார் கூறு.
யூ
யூகங்கள் ஏமாற்றும்!
தப்பாய் வழிகாட்டும்!
யூகத்தின் மெய்ப்பொருள் காண்.
யெ
தாயென்ன திட்டினாலும்
சேய்கள்
மறந்துவிட்டுத்
தாயிடம் ஓடிவரும் பார்.
யே
ஈயேன் என்றெண்ணிச்
சேர்த்துவைத்த செல்வங்கள்
போவேன் என்றுபோகும் போ.
யை
மாயை எனத்தெரிந்தும்
வீழ்ந்து துடிக்கின்றார்!
மாயைக் கவர்ச்சி தவிர்.
யொ
காயொன்றே வன்சொல்!
கனியொன்றே இன்சொல்தான்!
காயைத் தவிர்ப்பதே பண்பு.
யோ
யோகிகள் போகவாழ்வைத்
தள்ளமாட்டேன் என்றேதான்
போகிகளாய் வாழ்தல் தவறு.
யௌ
யௌவனம்-- இளமை
யௌவனத்தில் ஆக்கபூர்வ
ஆற்றலைப் பண்படுத்து!
அவனியில் முன்னேற்றம் உண்டு.
மதுரை பாபாராஜ் (13-10-2016 - கவிதைக்களம்)
மதுரை பாபாராஜ் கவிதைகள்..!
அறத்துப்பால்
குறள் 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன முதற்றே உலகு.
-----------------------------------------------------------------
அம்மா
குழந்தையின்
இதழ்சிந்தும்
முதல் சொல்!
அம்மா
அதனுடைய
முதல்எழுத்தோ
அகரம்!
மொழியின் முதலெழுத்து!
அவர்களுக்குப் பெயர்?
ஆதி பகவன்!
படைப்பின்
பெயரா?
இறைந்து கிடக்கும்
இயற்கைக்குப் பெயரா?
நம்பப்படும்
இறையின் பெயரா?
ஏதோ ஒன்றாய் இருக்கும்!
இருக்கட்டுமே!
உலகின் முதல் பொருளாய்
இருக்கட்டுமே!
மதுரை பாபாராஜ்
(13-10-2016 - கவிதைக்களம்)
மனக்குறள்
அகரவரிசை
ப
பயன்படும் நல்ல
பழமரம்போல் வாழ்ந்தால்
உலகமே வாழ்த்தும் மகிழ்ந்து.
பா
பாட்டியும் தாத்தாவும்
பேரனுக்கும் பேத்திக்கும்
ஆட்டிவைக்கும் பொம்மைதான் பார்.
பி
பிடிமானம் இல்லாத
வாழ்க்கையில் ஏக்கம்
நொடியை யுகமாக்கும்! சொல்.
பீ
பீடுநடை போட்டேதான்
வாழ்வதற்கு நல்லொழுக்கம்
பாடுபொருள் ஆகவேண்டும் இங்கு.
பு
புகழ்ந்தாரா ?ஏற்போம்!
இகழ்ந்தாரா? ஏற்போம்!
அகத்தில் சமநிலை கொள்.
பூ
பூட்டுகள் வீட்டிற்குப்
போடாதே! நாவிற்குப்
பூட்டுபோடு! நிம்மதி உண்டு.
பெ
பெருந்தன்மை கோழைத்
தனமல்ல! தாயே!
பெரும்புகழின் வீரம் அது.
பே
பேச்சிங்கே பேச்சாக
உள்ளமட்டும் ஒன்றுமில்லை!
பேச்சுக்குப் பேச்சு பகை.
பை
பைங்கொடி கொம்பொன்றைத்
தேடியது! பாரிவள்ளல்
தன்தேரைத் தந்தான் உவந்து.
பொ
பொன்பொருள்
கொடுத்தால்தான் பெண்ணெடுப்பேன் என்றுரைக்கும்
சண்டித் தனந்தன்னைச் சாடு.
போ
போதைக் கடிமையாய்
மாறிவிட்டால் இல்லறப்
பாதை இருள்மயந் தான்.
பௌ
பௌர்ணமி வெண்ணிலவைக்
காட்டித்தான் தாயிங்கே
தெள்ளமுதை ஊட்டுவாள் சேய்க்கு.
மதுரை பாபாராஜ் (11-10-2016 - கவிதைக்களம்)
கடமையே இலக்கு!
புகழ்ந்தாலும் நம்மை இகழ்ந்தாலும் என்றும்
அகத்திலே ஏற்கின்ற பக்குவத்தைப் பெற்றே
கடமையை இங்கே இலக்காக்கி வாழ்வோம்!
படைபோல முன்னேறப் பார்.
மதுரை பாபாராஜ் (13-10-2016 - கவிதைக்களம்)
குறள் வணக்கம்
1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும்,தாள்தந்தது
உண்ணலின்,ஊங்கினிய தில்.
தண்ணீர் உறவாட
சமைத்திட்ட கஞ்சியே
என்றாலும் நம்உழைப்பால் இவ்வுலகில் - உண்ணுகின்ற
நற்பயனைக் காட்டிலும் நாட்டில் மகிழ்ச்சிவேறு
சற்றும் இருக்குமானால் சாற்று.
மதுரை பாபாராஜ் (13-09-2016 - கவிதைக்களம்)