இந்நூலாசிரியர் திரு செ. நடராஜன் செல்லம் பணியின் காரணமாக எனக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் இவருள் இருக்கும் ஒரு படைப்பாளியை எனது பணி நிறைவுக்குப் பின் தான் கண்டேன். இன்று இவர்.. நாளை நாம்... என்னும் இந்நூல் ஓர் அரிய முயற்சி. படைப்பாளிகளை இனம் கண்டு தொகுத்துள்ளார். படைப்பாளர்களும் படைப்புகளும் என நூலின் தன்மையை குறிப்பிட்டுள்ளார். இஃது ஓர் சீரிய முயற்சி மட்டுமன்று கடினமானதும் கூட. படைப்பாளிகளைப் பற்றிய சிறிய அறிமுகத்துடன், அவர்தம் படைப்புகளை வரிசை படுத்தியுள்ளார். அவை வெளியிடப்பட்ட ஆண்டு முதலானவும், நூற் பட்டியலுடன் காணப் படுகின்றன. மிகவும் பேசப்பட்ட, புகழ் வாய்ந்த படைப்பாளிகளும் இதனுள் அடக்கம். தேடல் கொண்டு நுழைவோருக்கு, இலக்கியம் பயிலும் மாணவர்களுக்கு, இந்நூல் ஒரு பொக்கிஷம். படைப்பாளிகளின் இயற்பெயரையும் இவர் குறிப்பிடத் தவறவில்லை. நூல் படிக்கும் வேட்கை சின்னஞ்சிறு பிராயத்திலிருந்து தொடர்ந்து வந்திருந்தாலும், திரு ஜி. நாகராஜன், திரு. மா. இராமலிங்கம், திரு டெனியல் செல்வராஜ், ஆகிய சிலரை இந்நூலின் மூலமே அறிகிறேன். இன்னும் சிலர், இடம்பெறவில்லை, அஃது இடப் பற்றாக்குறையோ, நூலின் அளவோ காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே இது மிகவும் போற்றத்தகுந்த ஒரு முயற்சி. கு.பா. ரா., அழகிரிசாமி போன்ற கடந்த தலைமுறையினருடன், கடந்த நூற்றாண்டின், உ.வே.சா முதலான பெருமக்களின் குறிப்பும் இடம் பெற்றுள்ளது. இதனை மனமுவந்து பாராட்டுகிறேன். இப்பணி மேலும் தொடர்ந்து, ஆய்வு மாணவர்களுக்கு துணைபுரிய வேண்டும் என விழைகிறேன்.