பேசிக்கடந்த காலம்..."

இந்த செமஸ்டரின் கடைசி exam எழுதிவிட்டுத்திரும்பிய மகனிடம் கேட்டேன்,

“exam எப்படி எழுதின?”

அவன் காதிலிருந்து கேள்கருவியை ஒற்றை விரலால் உருவி,

“ம்?” என்று தலையுயர்த்தி கேட்டுவிட்டு,

“ம்ம்ம்!” என்று பதிலளித்தான்.

வளர்ந்து விட்ட மகனுடனான உரையாடல்கள் மணிரத்னம் பட வசனங்களைப் பழிக்கும்.

மனைவியுடனான சம்பாஷணைகள் வேறுவிதம்.
மழை சிணுங்கி க் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், மனையாளின்,

“இரவுக்கு என்ன டிபன் செய்யலாம்?”
என்ற கேள்விக்கு மயங்கி, ஜந்தறிவு உயிரினத்துக்குள்ள அடிப்படை பாதுகாப்பு உணர்வு கூட இல்லாமல்,
“பூரி கிழங்கு செய்யேன்” என்றேன்.

“ஆமாம்…கொலஸ்ட்ரால் எகிறிப்போய்க்கிடக்கு.. .. பூரி…இதுல உருளைக்கிழங்கு வேற…வாய்வு புடிச்சுகிச்சின்னு வயத்தப்புடிச்சுக்கிட்டு புலம்பினா யாரு பாக்கறது’

“சரி, விடு…சப்பாத்தி குருமா பண்ணிறேன்...” என்றேன் சமாதானமாய்.

“குருமாவா…ஒரு காய்கறி கிடையாது.. நானும் ரெண்டு நாளா புலம்பிட்டிருக்கேன்..இந்தா இருக்க பழமுதிர்சோலைல போயி கறிகாய் வாங்கிட்டு வர உங்களுக்கு வாய்க்கல…சின்னப்புள்ளங்க மாரி எப்ப பாரு செல்ஃபோன நோண்டிகிட்டு….”

“சரி..சரி..வயிறு ஒரு மாதிரிதா இருக்கு..நைட் சாப்பாட கட் பண்ணிட வேண்டிதுதான்..”
“உங்களுக்கு வீட்டு சாப்பாடுன்னா ஆகாது…ஹோட்டல்ல போயி கண்டத சாப்பிட்டுட்டு வந்தா வயிறு சரியாவா இருக்கும்?”
“இரு..நாம்போயி கறிகாய் வாங்கிட்டு வந்துர்றேன்…” என்று சட்டையைப் போட்டுக்கொண்டு சம்பவ இடத்தை விட்டு விலகுவதே ஒரு நடுத்தரக் குடும்பத்து ஆண்மகனின் புத்திசாலித்தனம்?

இன்று பேச்சு குறைந்தே குறைந்து விட்டது எனக்கூற முடியாது. முகத்தோடு முகம் நோக்கிய உரையாடல்கள் குறைந்து, நடந்து கொண்டும் படித்துக்கொண்டும் படுத்துக்கொண்டு ம் இன்ன பிற வேலைகளின் நடுவே மொபைல் வழியிலான இயந்திரப் பேச்சு அதிகரித்து விட்டது.

எங்களின் இளம்பருவம் பேசிப்பேசியே.., பேசுவதைக் கேட்டுக்கேட்டே ...கழிந்த காலம். மின்னணு பரவலில்லை… வார்த்தைகள் காற்றில் கலந்து பரவி நீக்கமற நிறைந்திருந்த காலம்…

வீட்டுக்கும் பள்ளிக்குமான தூரங்களை முதுகில் கனக்காத புத்தக மூட்டையும் வாய் ஓயாத பேச்சுமாய் கடந்த காலமது.

அப்பா அலுவலக விஷயமாக தஞ்சாவூருக்கோ அல்லது குடும்ப விசேஷமாக திருநெவேலிக்கோ போய்விட்டுத் திரும்பும் நாட்களில், திரும்பி வர எவ்வளவு நேரமென்றாலும் காத்திருப்போம். வாங்கி வரப்போகும் திருவையாறு ராமன் ஸ்வீட்ஸ் அசோகா அல்வாவுக்கோ, திருநெவேலி இருட்டுக்கடை அல்வாவுக்காகவோ மட்டுமல்ல..அப்பாவின் பயண அனுபவங்களை கேட்பதற்காகவும்தான்!.

பாபநாசத்தில் பஸ் ஏறியதில் ஆரம்பித்து இரண்டு நாட்கள் கழித்து அதே பஸ்ஸ்டாண்டில் திரும்ப வந்து இறங்கும் வரையிலான அனுபவங்கள் இன்ஸால்ட்மெண்ட்டில் இரண்டு நாட்கள் ஓடும்.

மால்களில் இலக்கின்றி
சுற்றி த்திரிந்து விட்டு திடீரென முடிவெடுத்து, ஏதோ ஒரு படத்தை பார்த்து விட்டு, வீடு வந்து சேர்வதற்குள் என்ன படம் பார்த்தோம் என்பது நினைவின்றிப்போகிற பரபரப்பின் மத்தியில், ஒரு காட்சி கூட விட்டு விடாமல் பாடல் காட்சிகளோடு சரசு அத்தை சொன்ன ‘ செம்மீன்’ கருத்தம்மேயின் கதையினை நடு இரவும் தாண்டி விழித்திருந்து கண்கள் நீர்வழியக் கேட்டிருந்த காலங்கள் சென்ற பிறவியில் போலிருக்கிறது!

கோடை விடுமுறைக் காலங்களில் குடமுருட்டி ஆற்றின் மணற்பரப்புதான் எங்களுக்கான பீச். பாபநாசம் ரயில்வே ஸ்டேஷன் ப்ளாட்பார சிமெண்ட் பெஞ்ச்சுகள் எங்கள் பார்க்!. மாலை நீண்டு இரவு தொடும் மணிக்கணக்கு நிமிடங்களாய்க் கரையும்… இலக்கில்லா வாய்ப்பேச்சில். ஸ்டேஷனை ஒட்டினாற்போலிருக்கும் பிரம்மாண்டமான ஆலமரம்… மாலை நேரம் கூடடையும் பறவைகளின் கீச் கீச்சுகள்!..எங்களுக்கு போட்டி!..

இன்றின்
செயற்கைப் பரபரப்பின் மாயச்சுழலில் சுற்றிச்சுழலும் சருகாய்ப்பறக்கிறது வாழ்க்கை!

குறுஞ்செய்திகளின்
குறும்பரப்பில்
குறைந்து போனது
பேச்சு!

__NATs